உடுமலை நாராயணகவி

உடுமலை நாராயணகவி (நாராயணசாமி; செப்டம்பர் 25, 1899 – மே 23, 1981) தமிழ்க் கவிஞர், திரைப் பாடலாசிரியர், நாடக ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர். விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்கள், தெருக்கூத்து மற்றும் நாடகங்களை எழுதி அரங்கேற்றினார். சமூக மாற்றத்திற்கான கருவியாக நாடகக்கலையைப் பயன்படுத்தினார். எளிய நகைச்சுவையுடன் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களும் அறிவியல் பார்வையும் கொண்ட நாடக, திரைப்படப் பாடல்களை எழுதினார்.
இலக்கியவாழ்க்கை உடுமலை நாராயண கவி நாடகம், திரைப்படம் ஆகியவற்றுக்குப் பாடல்களும் கதைகளும் எழுதியவராகவே அறியப்படுகிறார். நாட்டுப்புறப் பாடல்களை அடியொற்றிய தனிப்பாடல்களும் எழுதியுள்ளார். தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்ற பல்வேறு கலை வடிவங்களுக்காகப் பாடல்கள் எழுதினார். கவி நயமும், ஓசை நயமும் பொருந்தியிருந்தாலும் பேசுபொருளாலேயே பெரும்பாலும் கவனிக்கப்பட்டன. காதல், மூடநம்பிக்கை மறுப்பு, அறிவியல், பகுத்தறிவு, சாதி மறுப்பு, பெண் விடுதலை, பொதுவுடமை ஆகியவற்றைப் பேசுபொருளாகக் கொண்டிருந்தன. தான் வாழ்ந்த காலத்தின் சமுதாயப் பிரச்சினைகளின் கூர்ந்த அவதானிப்புடன் சீர்திருத்தக் கருத்துக்கள் கதையோடு பொருந்திய நகைச்சுவையுடன் அவர் பாடல்களில் இடம்பெற்றன. திருக்குறளின் கருத்துக்களையும், நீதிகளையும் தன் பாடல்களில் எடுத்தாண்டார். பல பாடல்கள் எளிய உழைக்கும் மனிதர்களின் குரலாக ஒலித்தன. பிற்காலத்தில் அறிவியல் வளர்ச்சியால் வாழ்க்கை முறையில் ஏற்படப்போகும் மாற்றங்களைக் கணித்த ‘விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி’ (நல்லதம்பி: 1949) போன்ற பாடல்களில் அவரது அறிவியல் பார்வை வெளிப்பட்டது. அவரது பாடல்கள் மக்களால் மிகவும் விரும்பப்பட்டன.
இலக்கிய/பண்பாட்டு இடம் உடுமலை நாராயண கவி தமிழில் தெருக்கூத்து போன்ற நாட்டார் மரபைச் சேர்ந்த அரங்ககலையில் இருந்தும், புராண கதாகாலட்சேபம் போன்ற கோயிற்கலைகளில் இருந்தும் மேடைநாடகம், திரைப்படம் ஆகிய புதியவகை அரங்ககலைகள் உருவாகி வந்த மாறுதல் காலகட்டத்தில் செயல்பட்டவர். பழைய மரபின் தொடர்ச்சியாக புதியவகைக் கலைகளுக்கு தேவையான பாடல்களை எழுதியவர் என்னும் வகையில் தமிழ் பொதுமக்கள் கலைகளின் மாற்றத்தை நிகழ்த்தியவர்களில் ஒருவர். அவருடைய நாடகப்பாடல்களும் திரைப்படப் பாடல்களும் பழைய இசைப்பாடல்கள் (கீர்த்தனைகள்) மற்றும் நாட்டார்ப்பாடல்களின் சொல்லமைப்பையும் இசைமுறைமையையும் கொண்டவை. ஆனால் கூடவே நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் உரியவகையில் நவீன இசையுடனும் நவீன வாழ்க்கைக்கூறுகளுடனும் அவை இணைக்கப்பட்டிருந்தன. நாடகங்களும் திரைப்படங்களும் அரசியல், சமூகசீர்திருத்தம் ஆகியவற்றை பேசுபொருளாகக் கொண்ட மாறுதல்காலகட்டத்தில் அந்தக் கருக்களை தன் பாடல்களில் முன்வைத்தவர் என்னும் வகையிலும் முன்னோடியாக மதிப்பிடப்படுகிறார்.