Chicago Tamil Sangam

புலியூர்க் கேசிகன்

புலியூர்க் கேசிகன்

புலியூர்க் கேசிகன் தனித்தமிழ் எழுத்தாளர், உரையாசிரியர், மெய்ப்பு திருத்துநர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், சோதிடர், எண்கணித வல்லுநர், செய்யுளாசிரியர், ஆவியியல் ஆய்வாளர், சொற்பொழிவாளர் என்னும் பன்முகம் கொண்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு

நெல்லை மாவட்டத்தில் உள்ள புலியூர்க் குறிச்சி என்னும் சிற்றூரில் கந்தசாமி பிள்ளை, மகாலட்சுமி அம்மையார் ஆகியோருக்கு அக்டோபர் 16, 1923 ஆம் நாள் புலியூர்க் கேசிகன் பிறந்தார். இவருக்கு சொக்கலிங்கம் எனப் பெற்றோர் பெயரிட்டனர்.

சொக்கலிங்கம் என்னும் இயற்பெயருடைய புலியூர்க் கேசிகன் தனது ஊருக்கு அருகிலுள்ள டோணாவூரில் தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப்பள்ளி கல்வியையும் பெற்றார். பின்னர் திருநெல்வேலியில் உள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் இடைநிலை வகுப்புக் கல்வி (Intermediate) பெற்றார். அப்பொழுது நடைபெற்ற இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டார்.

கல்லூரிக்கல்விக்குப் பின்னர் தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள், தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார், பேராசிரியர் முனைவர் மு. வரதராசன் ஆகியோரிடம் தொடர்புகொண்டு தன்னுடைய தமிழறிவை வளர்த்துக்கொண்டார்.

கல்லூரிக் கல்வியை நிறைவு செய்த புலியூர்க் கேசிகன், நெல்லை மாவட்டத்தில் உள்ள வடுகச்சி மலைப்பள்ளியில் மூன்று ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்பொழுது டோணாவூர் மருத்துவமனையில் மறைமலையடிகள் மகளும் தனித்தமிழ் இயக்கத்தின் நிறுவுநர்களில் ஒருவருமான தமிழ்ப் பேராசிரியர் நீலாம்பிகை அம்மையார் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கேசிகனும் அவர் குடும்பத்தினரும் பேருதவியாக இருந்தனர். இதனால் மகிழ்ந்த நீலாம்பிகை அம்மையார், தன் கணவரும் திருநெல்வேலி தென்னிந்திய சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் அமைச்சருமான திருவரங்கனாரிடம் புலியூர்க் கேசிகனைப் பற்றி எடுத்துரைத்தார். இதன் விளைவாக கேசிகன் அந்த நூற்கழகத்தின் திருநெல்வேலிக் கிளையில் மேலாளராகப் பணியில் அமர்த்தப்பட்டார். புலியூர்க் கேசிகன் பத்தாண்டுகள் அப்பணியை மேற்கொண்டார்.

பின்னர் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். அருணா வெளியீடு என்னும் பதிப்பகத்தில் இரண்டு ஆண்டுகள் மேலாளராகப் பணியாற்றினார். பின்னர் பாரி நிலையம், மாருதி பதிப்பகம் ஆகியவற்றில் நீண்ட நாள்கள் பணியாற்றினார்.

தமிழ் பேரிலக்கியங்களுக்கும் பெருங் காப்பியங்களுக்கும் எளிமையான நடையில் ஜனரஞ்சகமான முறையில் தெளிவுரைகளை ஏழுதி வெளியீடு செய்து பெரும்பணி ஆற்றிய பேராளர். நவீன தமிழியல் வளர்ச்சிக்கு பல பேராசிரியர்களையும் விஞ்சிய வகையில் புலியூர்க் கேசிகன் பணி செய்துள்ளார்.

சிறப்பம்சங்கள்

அருணா வெளியீடு, பாரி நிலையம், வானதி பதிப்பகம் ஆகிய பதிப்பகங்களின் வழியாக 50 இலக்கிய நூல்களுக்கு உரைகள்; 10 சோதிட நூல்கள்; 5 உளவியல் நூல்கள்; 3 யோக நூல்கள்; 5 ஆன்மிக நூல்கள்; 2 வரலாற்று நூல்கள்; 7 குறள் தொடர்பான நூல்கள்; தொகுப்பு, ஆராய்ச்சி, கவிதை ஆகியன உள்ளடக்கிய துறைகளில் 8 நூல்கள் என 90 நூல்களை புலியூர்க் கேசிகன் படைத்திருக்கிறார்.