கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி)

கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி, செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) தமிழில் பொதுவாசகர்களுக்கான பெரும்புகழ்பெற்ற கற்பனாவாதக் கதைகளை எழுதியவர். இந்திய தேசிய இயக்கத்தில் இருந்து உருவாகி வந்த படைப்பாளி. சுதந்திரப்போராட்ட வீரர். தமிழிசை இயக்கத்தை முன்னெடுத்தவர். தமிழ் இதழியல் முன்னோடிகளில் ஒருவர். தமிழ் உரைநடையின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றியவர். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற வரலாற்று கற்பனாவாத நாவல்கள் தமிழ் பொதுவாசிப்புத்தளத்தைச் சேர்ந்த பெரும் செவ்வியல்படைப்புகள் எனப்படுகின்றன. கல்கி வார இதழை நிறுவியவர். தமிழில் கேளிக்கைசார்ந்த வாசிப்பையும் அதற்கான எழுத்துமுறையையும் உருவாக்கி நிறுவனப்படுத்தியவர் என்று அறியப்படுகிறார்.
இலக்கிய இடம் கல்கியின் முதன்மையான இலக்கிய செயல்பாடு தமிழ் உரைநடை உருவாக்கத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பே. பொழுதுபோக்கு நாவல்கள், இதழியல் கட்டுரைகள், சிறுகதைகள், பயணக்கட்டுரைகள், இசைவிமர்சனம், திரைப்பட விமர்சனம், அரசியல் விமர்சனம், நையாண்டிக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் என பல தளங்களிலும் தொடர்ச்சியாக எழுதி தமிழ் உரைநடையின் எல்லா சாத்தியங்களையும் விரிவுபடுத்தினார். அவரை முன்னோடியாகக்கொண்டு மூன்று தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகி வந்தனர்.
கல்கியின் தியாகபூமி போன்ற தொடக்ககால நாவல்கள் ரெயினால்ட்ஸ் போன்றவர்கள் எழுதிய பரபரப்பும் மெல்லுணர்ச்சியும் கலந்த பொதுவாசிப்புக்குரிய ஆக்கங்கள். கல்கியின் கதை சொல்லும் முறையில் வடுவூர் கே. துரைசாமி அய்யங்கார் போன்ற முன்னோடிகளின் பாதிப்பும் இருந்தது. பின்னாளில் சரித்திர நாவல்களை எழுதினார். சர் வால்டர் ஸ்காட், அலெக்ஸாண்டர் டூமா போன்ற எழுத்தாளர்களைத் தனது முன்னோடிகளாக கல்கி குறிப்பிட்டிருக்கிறார். பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்ற நாவல்களை இலக்கியவரையறையின்படி கற்பனாவாத உணர்ச்சிக் கதைகள் (Romance) என விமர்சகர்கள் வரையறுக்கிறார்கள்
பொன்னியின் புதல்வர் ஆனால் தன் முன்னோடிகளைப் போல முற்றிலும் கேளிக்கை எழுத்தாக இல்லாமல் அன்று நிகழ்ந்து வந்த இந்திய தேசிய எழுச்சி, தமிழ்க் கலாசார மறுமலர்ச்சி, சமூக சீர்திருத்த நோக்கு ஆகியவற்றின் கூறுகள் கல்கியின் படைப்புகளில் இருந்தன. அவருடைய வரலாற்று நாவல்கள் தமிழர்களின் வரலாற்றுப் பொற்காலங்களை புனைந்து காட்டின. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி போன்றவர்கள் வரலாற்றாய்வு வழியாக உருவாக்கிய பல்லவர், சோழர் காலத்து வரலாற்று வரைவை கல்கி தன் புனைவுகள் வழியாக மக்களிடம் கொண்டுசென்றார். அவை அப்போது உருவாகி வந்த தமிழ்த்தேசியப் பெருமிதத்தை வலுப்படுத்தின.
கல்கியின் நாவல்களில் தமிழகத்தின் பண்பாட்டுப் பரிணாமத்தின் சித்திரம் உள்ளது. சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்ற நாவல்களில் பக்தி இயக்க நாயகர்களை புனைந்து காட்டுகிறார். அவருடைய சிவகாமியின் சபதம் ராமாயணத்தின் சாயலையும் பொன்னியின் செல்வன் மகாபாரதத்தின் சாயலையும் கொண்டது. பொன்னியின் செல்வனில் அலக்ஸாண்டர் டூமாவின் The Three Musketteers, The Man in the Iron Mask போன்ற நாவல்களின் செல்வாக்கு உண்டு. ’இந்தியக் காவிய மரபின் சாயலை மேற்கத்திய சாகசக் கதைகளின் சித்தரிப்புடன் இணைத்துத் தன் புனைவுத் தளத்தை உருவாக்கினார்’ என ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகத்தில்’ எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
கல்கியின் சிறுகதைகள் சிறுகதையின் வடிவ அமைதி பெறாத நீண்ட கதையுரைப்புகளாகவே உள்ளன. ‘கல்கியினால் சிறுகதை தமிழ் மண்ணில் இரண்டறக் கலந்தது. அந்த அத்திவாரத்தின்மீதே சிறுகதை கட்டி எழுப்பப்பட்டு சிகரமும் அமைக்கப்பட்டது. அவ்வளர்ச்சியை ஏற்படுத்தியவர்கள் மணிக்கொடி குழுவினர்’ என கார்த்திகேசு சிவத்தம்பி குறிப்பிடுகிறார்.