கலைஞர் மு.கருணாநிதி

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி முன்னாள் தமிழக முதல்வரும் தமிழ் மொழிக்கு மாபெரும் கொடையளித்தவர் . 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கலைஞர் மு. கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். ‘தூக்குமேடை’ நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார்.
இதழியல் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பின் மூலம் மாணவர்களிடையே எழுத்தாற்றலை வளர்க்க, ‘மாணவர் நேசன்’ என்ற எட்டுபக்க கையெழுத்து மாத இதழைத் துவக்கினார்.அவ்விதழில் அருட்செல்வன் , சேரன், மறவன் என பல புனைபெயர்களில் எழுதினார். எட்டு இதழ்கள் வரை வெளியான பின் அதன் முதலாவது ஆண்டு விழாவை 1942-ல் நடத்தினார். மு.கருணாநிதி 1944ல் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் நடத்திய குடியரசு இதழில் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்று ஓராண்டு பணியாற்றினார். 1951-ல் மாலைமணி பத்திரிக்கையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.
முரசொலி ‘மாணவர் நேசன்’ 1942-ல் முரசொலி எனும் துண்டு பத்திரிக்கையாக பெயர் மாற்றம் பெற்றது. அதில் ‘சேரன்’ என்ற பெயரில் சமூக விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதினார். இதன் முதலாமாண்டு விழாவை திராவிட கழக பேச்சாளர்களான அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோரை அழைத்துக் கொண்டாடினார். இடையில் சில காலம் இவ்விதழ் தடைபட்டது. 1946 முதல் 1948 மாத இதழாக முரசொலி வெளிவந்தது. 25 இதழ்களுக்குப் பின் மீண்டும் இதழ் தடைபட்டது. 1953-ல் சென்னையில் மாத இதழாகத் தொடங்கினார். 1960-ல் நாளிதழாக மாற்றினார். தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.
இலக்கிய வாழ்க்கை கலைஞர் மு. கருணாநிதி 1942-ல் அண்ணா நடத்திய ‘திராவிட நாடு’ இதழில் ‘இளமை பலி’ என்ற கட்டுரையை எழுதினார். தொடர்ந்து அரசியல், சமூக கட்டுரைகள் பல எழுதினார். ’நண்பனுக்கு’, ’உடன்பிறப்பே’ என்னும் தலைப்புகளில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதினார். கரிகாலன் என்னும் பெயரில் கேள்வி-பதில்கள் எழுதினார். தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்கள் எழுதினார். தனது வாழ்க்கைவரலாற்றை ’நெஞ்சுக்கு நீதி’ என்னும் தலைப்பில் தினமணி கதிர் (முதலாவது பகுதி), முரசொலி, குங்குமம் ஆகிய இதழ்களில் தொடர்கட்டுரையாக எழுதினார். பின்னர் அக்கட்டுரைத்தொடர் அதேபெயரில் 4165 பக்கங்களில் ஆறு பாகங்களைக் கொண்ட நூலாக வெளிவந்தது. 1957 முதல் 2018-ம் ஆண்டு வரை கருணாநிதி சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் 12 தொகுதிகளாக வெளிவந்தன. நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் என பல வடிவங்களில் புனைவுகள் எழுதினார். ‘சங்கத்தமிழ்’, ‘தொல்காப்பிய உரை’, ‘இனியவை இருபது’, ‘மேடையிலே வீசிய மெல்லியப் பூங்காற்று’, ‘மலரும் நினைவுகள்’, ‘கலைஞரின் கவிதை மழை’, ‘இளைய சமுதாயம் எழுகவே’ உட்பட 178 நூல்களை எழுதினார். ‘குறளோவியம்’ என்ற தலைப்பில், திருக்குறளுக்கு விளக்க உரை எழுதினார்.
கவிதை 1938-ல் தனது பதினான்காம் வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். ’கவிதை மழை’ என்னும் கவிதைத் தொகுப்பு நூல் 1707 பக்கங்களைக் கொண்டது. 1938 முதல் 2004 வரை 66 ஆண்டுகள் மு. கருணாநிதி எழுதிய கவிதைகளை 210 தலைப்புகளில் இடம்பெற்றது.
நாவல் கலைஞர் மு. கருணாநிதி பதினாறு நாவல்கள் எழுதினார். பகுத்தறிவு, சாதிமதபேத ஒழிப்பு, போலித்தனமான வாழ்க்கையைச் சாடுதல், தமிழரின் பழம் பெருமைகளைப் போற்றுதல், மண வாழ்க்கையில் ஆண் பெண் சமத்துவம் ஆகியவற்றை பேசு பொருளாகக் கொண்ட நாவல்கள் எழுதினார்.
முதல் நாவலான ‘புதையல்’ மூடத்தனத்தில் முக்கிய மனிதர்கள் புதையலை அடைவதற்காக செய்யும் மிருகத்தனமான உயிர் பலிகள், போலிச்சாமியார்களின் கயமை போன்றவற்றை எடுத்துக்காட்டி பகுத்தறிவு சிந்தனைகளைப் பேசுவதாக அமைந்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களின் துன்பங்களையும், அந்த மக்கள் தங்கள் தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபட வேண்டிய அவசியத்தையும், கலப்புமணம் பெருகவேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்துவது ‘ஒரே ரத்தம்’ நாவல். ’ஒரு மரம் பூத்தது’ என்ற நாவல் விதவை மறுமணம் பற்றி எழுதப்பட்டது.
கடித இலக்கியம் தமிழில் கடித வடிவத்தை ஒரு உத்தியாக கொண்டு கட்டுரை வரைவதை முதலில் தொடங்கியவர் மு. வரதராசன். அதன்பின் அண்ணாத்துரை. அந்த மரபை மு. கருணாநிதி பின்பற்றினார். கட்சித் தொண்டர்களுக்கு எழுதும்போது ’உடன்பிறப்பே’ என்ற விளிப்புடன் கடிதத்தைத் தொடங்கினார். ’பழைய நண்பனே’, ’மாஜி நண்பா’ என்ற விளிப்புடனும் சில கடிதங்கள் குறிப்பிட்ட நபர்களுக்கு எழுதினார்.
கலைஞர் மு. கருணாநிதியின் கடிதங்கள் அரசியல் செய்திகளோடு நாட்டு நிகழ்வுகளையும் பொருளாதார, கலாச்சார, சமுதாய துறைகளின் போக்குகளையும் பேசியவை. சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, மொழி உணர்வு ஆகியவையுடன் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியத்தின் மேற்கோள்கள் காட்டிக் கடிதங்கள் எழுதினார். குட்டிக்கதைகள், உருவகக்கதைகள், உவமை உருவகம், பண்பாட்டுத் தலைவர்கள் வரலாற்று நாயகர்கள், இலக்கியவாதிகள், போன்றோரின் வாழ்க்கை நிகழ்வுகள்’ போன்றவற்றின் மூலம் தன் கருத்துக்களை விளக்குவதை கடித உத்தியாகக் கையாண்டார்.
’வீரத்தின் திருவுருவே! மான மரபின் குலவிளக்கே!’ என தொண்டர்களை போராட அழைக்கும் தொனியும், கட்டளையிடும் போதும் அணுக்கமான தொனியும் கொண்ட விளிச்சொற்களைப் பயன்படுத்தினார். இக்கடிதங்கள் தொகுக்கப்பட்டு, பன்னிரெண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டன.
இலக்கிய இடம் கலைஞர் மு. கருணாநிதி எழுதிய அபுனைவுகள், புனைவுகள், நாடகம், திரைப்படம் என கலை சார்ந்த யாவும் அவரின் சிந்தனைகள், நம்பிய கொள்கைகள், அரசியல் வாழ்க்கை ஆகியவற்றை பிரதிபளிக்கும் ஊடகமாக மாற்றிக் கொண்டார்.
கலைஞர் மு. கருணாநிதியின் கவிதைகளைப் பற்றி மு.மேத்தா கூறுகையில் ”அவரது கவிதைகள் மரபும் அல்ல புதியதும் அல்ல ’புதுமரபுக் கவிதைகள்’. ஏனெனில் அவரது கவிதைகளில் யாப்பு, எதுகை, மோனை என மரபுக் கவிதைகள் போன்று அனைத்து இலக்கண நயமும் பொருந்தி இருக்கும். அதேசமயம் புதுமையான பேசுபொருட்களையும் கையாண்டார்” என மதிப்பிட்டார். அவரது கடித இலக்கியப் படைப்புகள் மு. வரதராசன், அண்ணாத்துரை ஆகியோரின் கடித இலக்கியத்தின் நீட்சியாக அமைந்தவை.
நூல்கள் பட்டியல்
கவிதைத் தொகுப்பு கவிதையல்ல 1945 முத்தாரம்(சிறையில் எழுதிய கவி வசனங்கள் தொகுப்பு) அண்ணா கவியரங்கம் 1968 Pearls (Translation) 1970 கவியரங்கில் கலைஞர் 1971 கலைஞரின் கவிதைகள் 1977 வாழ்வெனும் பாதையில், கவியரங்கக் கவிதை கலைஞரின் திரை இசைப்பாடல்கள் 1989 கலைஞரின் கவிதை மழை 2004
நாவல் இரத்தக்கண்ணீர் சுருளிமலை பெரிய இடத்துப்பெண் (1948) வெள்ளிக்கிழமை (1956) புதையல் (1975) வான்கோழி (1978) அரும்பு (1978) ஒரே ரத்தம் (1980) வரலாற்று நாவல் பலிபீடம் நோக்கி 1947 ரோமாபுரிப் பாண்டியன் 1974 பொன்னர் – சங்கர் அண்ணன்மார் வரலாறு 1988 பாயும் புலி பண்டாரக வன்னியன் 1991 தென்பாண்டிச் சிங்கம் 1983 தாய் – காவியம்
குறுநாவல் சாரப்பள்ளம் சாமுண்டி நடுத்தெரு நாராயணி (1953) சிறுகதைத் தொகுப்பு ஒருமரம் பூத்தது (1979) கண்ணடக்கம் (1957) கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் (1977, 1982, 1991) கிழவன் கனவு (1945) சங்கிலிச்சாமியார் (1945) தப்பிவிட்டார்கள் (1952) தாய்மை (1956) தேனலைகள் (1958) நளாயினி (1956, திராவிடப்பண்ணை) பழக்கூடை 1979 பதினாறு கதையினிலே பிள்ளையோ பிள்ளை (1948, விந்தியம் வெளியீடு) மு.க.வின் சிறுகதைகள் (முத்துவேல் பதிப்பகம்) முடியாத தொடர்கதை (1982) நாடகங்கள் அனார்கலி (1957) உதயசூரியன் (1959) உன்னைத்தான் தம்பி இளைஞன் குரல் (1952) ஒரே முத்தம் காகிதப்பூ (1966) சாக்ரடீஸ் (1957) சாம்ராட் அசோகன் சிலப்பதிகாரம் - நாடகக்காப்பியம் சேரன் செங்குட்டுவன் (1978) திருவாளர் தேசியம்பிள்ளை தூக்கு மேடை (1957) (முத்துவேல் பதிப்பகம், திருச்சி) நச்சுக் கோப்பை நான்மணிமாலை நானே அறிவாளி (1971) பரதயாணம் (1978) பரப்பிரம்மம் (1953) பலிபீடம் நோக்கி (1948, எரிமலைப் பதிப்பகம்) பிரேத விசாரணை புனித இராஜ்யம் 1979 மணிமகுடம் (1955, முத்துவேல் பதிப்பகம்) மகான் பெற்ற மகன் (1953) மந்திரிகுமாரி வாழமுடியாதவர்கள்
உரைநூல்கள் குறளோவியம் (குறுநூல்) 1956 குறளோவியம் (முதல் பதிப்பு) 1985 தேனலைகள் மூன்றாம் பதிப்பு 1982 சங்கத் தமிழ் (கவிதை நடை விளக்கம்) (முதல் பதிப்பு) 1987 திருக்குறள் கலைஞர் உரை (முதல் பதிப்பு) 1996 தொல்காப்பியப் பூங்கா 2003
இலக்கிய மறுஆக்கங்கள் குறளோவியம் 1968, 1985 சிலப்பதிகாரம் - நாடகக்காப்பியம் 1967 தாய் பூம்புகார் (முரசொலி மலர்களில் வெளிவந்த தொடர்)
தன்வரலாறு இனியவை இருபது (முதல் பதிப்பு) 1973 இந்தியாவில் ஒரு தீவு 1978 ஆறுமாதக் கடுங்காவல் 1985 நெஞ்சுக்கு நீதி 1975 கையில் அள்ளிய கடல் (பேட்டிகளின் தொகுப்பு) 1998
நேர்காணல் கையில் அள்ளிய கடல் 1998
சொற்பொழிவுகள் தலைமையுரை போர்முரசு மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று பெரியார் பிறவாதிருந்தால்
கட்டுரைகள் அகிம்சாமூர்த்திகள் (1953, பாரிநிலையம்) அல்லிதர்பார் (1953, பாரி நிலையம்) ஆறுமாதக் கடுங்காவல் (திராவிடப்பண்ணை) இந்தியாவில் ஒரு தீவு (1978) இளைய சமுதாயம் எழுகவே இருளும் ஒளியும் இலங்கைத் தமிழா, இது கேள்! (1981) இனமுழக்கம் உணர்ச்சிமாலை (1951) உண்மைகளின் வெளிச்சத்தில் (1983) உரிமையின் குரலும் – உண்மையின் தெளிவும் கருணாநிதியின் வர்ணனைகள் (1952, கருணாநிதி பதிப்பகம்) களத்தில் கருணாநிதி (1952) சரித்திரத் திருப்பம் சுழல்விளக்கு (1952, கருணாநிதி பதிப்பகம்) மயிலிறகு (1993) மலரும் நினைவுகள் (1996) முத்துக்குவியல் பூந்தோட்டம் (திராவிடப்பண்ணை) பெருமூச்சு (1952) பேசுங்கலை வளர்ப்போம் (1981) பொன்னாரம் (கே.ஆர். நாராயணன் வெளியீடு) தலைதாழாச் சிங்கம் தந்தை பெரியார் (1985) திராவிடசம்பத்து (1951) துடிக்கும் இளமை நாடும் நாடகமும் (1953, திராவிடப்பண்ணை) யாரால்? யாரால்? யாரால்? (1981) விடுதலைக்கிளர்ச்சி (1952, திராவிடப்பண்ணை) பேசும்கலை வளர்ப்போம் இனியவை இருபது (பயணம்) சட்டமன்ற உரைகள் (1957 முதல் 2018)
சிறுகுறிப்புகள் சிறையில் பூத்த சின்ன சின்ன மலர்கள் (1978) வைரமணிகள் கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள் (1996) கலைஞரின் நவமணிகள் (1984) சிந்தனை ஆழி (1953) கருணாநிதியின் கருத்துரைகள் (1967) கலைஞரின் கருத்துரைகள் 1971) கலைஞரின் குட்டிக்கதைகள் கலைஞரின் உவமைக் களஞ்சியம் (1978) கலைஞரின் சொல்நயம் (1984) கலைஞரின் சின்ன சின்ன மலர்கள் (1994) கலைஞரின் முத்தமிழ் – சிந்தனைத்துளிகள் கலைஞர் உரையில் கண்டெடுத்த முத்துக்கள் கலைஞரின் உவமை நயங்கள் (1972) கலைஞரின் முத்துக்குவியல் கலைஞரின் நவமணிகள்