Chicago Tamil Sangam

கு. அழகிரிசாமி

கு. அழகிரிசாமி

கு. அழகிரிசாமி (Ku. Alagirisami) (செப்டம்பர் 23, 1923 - சூலை 5, 1970)[1] குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்த அழகிரிசாமி, சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார். வாழ்க்கைக் குறிப்பு

இவர் எழுத்தாளர் கி. ராஜநாராயணின் இளமைக் கால நண்பர். தமிழ் நேசன் (மலேசியா), சக்தி, சோவியத் நாடு, பிரசண்ட விகடன் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார். இலக்கிய உலகில் இவரது சிறுகதைகள் புகழ்பெற்றவை. 1970-இல், இவரது அன்பளிப்பு என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

அழகிரிசாமி திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் இடையில் இடைசெவல் என்னும் சிற்றூரில், குருசாமி-தாயம்மாள் ஆகியோருக்கு முதல் மகனாகப் பிறந்தார்.

வசதியின்மை காரணமாக அவரை நான்காவது வரைகூட படிக்க வைக்க அவரது பெற்றோரால் முடியவில்லை. ஆனால், விடாமுயற்சியுடன் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து முடித்தார். அந்தச் சிற்றூரில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. பள்ளிப் படிப்பைவிட அவர் அனுபவத்தில் பெற்ற அறிவே அதிகம்.

“உறக்கம் கொள்ளுமா?” என்ற இவரது முதல் சிறுகதை 1943-ஆம் ஆண்டு “ஆனந்த போதினி’ மாத இதழில் பிரசுரமானது.

ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியின் எழுத்து அவரை மிகவும் கவர்ந்தது. கார்க்கியின் நூலை முதன் முதலில் தமிழாக்கம் செய்தவர் இவர்தான். தமிழ் இலக்கியங்களுடன் மேல்நாட்டு இலக்கியங்களையும் படித்தார். பழைய பாடல்களுக்கு உரை எழுதும் ஆற்றலையும் வளர்த்துக்கொண்டார்.

இதழியல் 1944-ல் ஆனந்தபோதினி இதழில் பணிக்குச் சேர்ந்த கு.அழகிரிசாமி அதை உதறிவிட்டு வந்து சில மாதங்கள் கோயில்பட்டியில் தங்கிவிட்டு மீண்டும் சேர்ந்தார். 1952 வரை ஆனந்தபோதினி, பிரசண்ட விகடன், தமிழ் மணி, சக்தி ஆகிய இதழ்களில் உதவியாசிரியராக பணியாற்றினார்.

1952-ல் கு.அழகிரிசாமி மலேசியாவில் தமிழ் நேசன் இதழின் ஆசிரியராக சென்றார். 1952 முதல் 1957 வரை அவர் மலேசியாவில் வாழ்ந்த காலகட்டத்தில் மலேசிய இலக்கியத்தில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கினார். 1957-ல் அழகிரிசாமி மலேசிய தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி எழுதிய தலையங்கம் அரசின் சீற்றத்துக்கு ஆளானபோது அழகிரிசாமியை தமிழ்நேசன் இதழ் பணிநீக்கம் செய்தது.

கு.அழகிரிசாமி இந்தியா திரும்பி 1960 வரை காந்தி நூல்களின் மொழிபெயர்ப்புத் திட்டத்தில் பணியாற்றினார். 1960 முதல் நவசக்தி இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1965-ல் அப்பணியில் இருந்து விலகினார்.1970-ல் தொ.மு.சி. ரகுநாதன் பரிந்துரையால் சோவியத் லேண்ட் இதழ் அவருக்கு ஆசிரியர் பொறுப்பை அளித்தது. ஆனால் மூன்று மாதங்களே அங்கு அவர் பணிபுரிந்தார். அதற்குள் அவர் நோயுற்று மறைந்தார்.

இசைப்பணி கு.அழகிரிசாமிக்கு மரபிசையில் ஆர்வமும் பயிற்சியும் இருந்தது. அவருடைய ஊரில் மணம் புரிந்திருந்த நாதஸ்வரக் கலைஞர் காருகுறிச்சி அருணாசலம் அங்கு வரும்போதெல்லாம் உடனிருந்து இசைகேட்டார். இசையறிஞர் விளாத்திக்குளம் சுவாமிகள் பாடுவதை கேட்க தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தார். தமிழில் இசைப்பாடல்களை எழுதுவது, வழக்கொழிந்துபோன இசைப்பாடல்களை தேடித் தொகுப்பது ஆகியவற்றில் ஈடுபட்டதை அவருடைய கடிதங்கள் காட்டுகின்றன. அவர் மலேசியாவில் இருந்தபோது எட்டயபுரம் கடிகை நமசிவாயப் புலவர் இயற்றிய வல்லீ பரதம்’ ‘முக்கூடற்பள்ளு’ ஆகிய இசைநாடகங்களை தயாரித்தார். தியாகராஜர், பாரதியார், கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை போன்றோரின் பாடல்கள் சிலவற்றை ஸ்வரப்படுத்தியிருக்கிறார். அண்ணாமலை ரெட்டியாரின் ‘காவடிச்சிந்தையும்’ பதிப்பித்தார்.

இலக்கியவாழ்க்கை அழகிரிசாமி 1942-ல் தன் முதல் படைப்பான ‘உறக்கம் கொள்ளுமா’ எனும் கதையை ஆனந்தபோதினியில் வெளியிட்டார். இதழ்களில் பணியில் சேர்ந்தபின் வெவ்வேறு பெயர்களில் இதழ்களில் எழுதினார். முதன்மையாகச் சிறுகதைகளே அழகிரிசாமியின் இலக்கியச் சாதனைகள். கல்கி முதலிய இதழ்களில் தொடர்கதைகளும் எழுதினார். அவருடைய தொடர்கதைகள் நாவல்களுக்குரிய கலைத்தன்மை கொண்டவை அல்ல.

மொழியாக்கங்கள் அழகிரிசாமி சென்னையில் இதழ்களில் வேலைபார்க்கும்போது ரஷ்ய இலக்கியம் மீது ஆர்வம்கொண்டு 1950-ல் மாக்ஸிம் கார்க்கியின் அமெரிக்காவிலே, லெனினுடன் சில நாட்கள் ஆகிய நூல்களை மொழியாக்கம் செய்தார். பின்னர் 1957 முதல் 1960 வரை காந்தி நூல்வெளியீட்டு நிலையத்தில் பணிபுரியும்போது மாக்சிம் கார்க்கியின் யுத்தம் வேண்டாம், விரோதி பணியாவிட்டால் ஆகிய கட்டுரைநூல்களை தமிழில் கொண்டுவந்தார். பலநாட்டுச் சிறுகதைகள் என்னும் பெயரில் கதைகளை மொழியாக்கம் செய்தார். லாரன்ஸ் பன்யனின் அக்பர், குடியரசுத்தலைவர் ராஜேந்திரபிரசாத்தின் இந்திய ஒருமைப்பாடு, ஆகியநூல்களை மொழியாக்கம் செய்தார்.

பதிப்புப்பணி அழகிரிசாமிக்கு சிற்றிலக்கியங்கள், நாட்டாரிலக்கியங்களை முறையாகப் பதிப்பிக்கவேண்டும் என்னும் ஆர்வம் இருந்தது. பதிப்பிக்க எண்ணிய நூல்களைப்பற்றி அவர் கி.ராஜநாராயணனுக்கு எழுதிய கடிதங்களில் குறிப்பிடுகிறார். சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் எழுதிய காவடிச்சிந்து நூலின் செம்மைசெய்யப்பட்ட பதிப்பை அழகிரிசாமி தொகுக்க சக்தி காரியாலயம் வெளியிட்டது. கம்பராமாயணத்தில் ஐந்து காண்டங்களையும் குறிப்புகளுடன் பதிப்பித்தார். ஆண்டான் கவிராயர் போன்ற அறியப்படாத கவிஞர்களின் தனிப்பாடல்களை திரட்டி நூலாக்குவதைப் பற்றி கி.ராஜநாராயணனுக்கு ஆர்வத்துடன் எழுதியிருக்கிறார்

நாடகங்கள் கு.அழகிரிசாமிக்கு நாடகங்கள் மேல் தொடர் ஈடுபாடு இருந்தது. அவர் எழுதிய கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்னும் நாடகம் எஸ்.வி.சகஸ்ரநாமம் குழுவினரால் மேடையேற்றப்பட்டது.

புனைவிலக்கியங்கள் 1952-ல் அழகிரிசாமி எழுதிய ’கு.அழகிரிசாமியின் கதைகள்’ என்னும் நூல் சக்தி காரியாலயத்தால் வெளியிடப்பட்டது. அழகிரிசாமி நாவல்களை இதழ்களில் தொடராக எழுதினார். முழுநேர எழுத்தாளரானபிறகு சுதேசமித்திரன், கல்கி போன்ற இதழ்களில் தொடர்நாவல்கள் வெளிவந்தன. அவருடைய சிறந்த சிறுகதைகள் 1960 முதல் 1965 வரையிலான காலகட்டத்தில் அவர் நவசக்தி இதழில் பணியாற்றியபோது எழுதப்பட்டவை. கு.அழகிரிசாமி தொ.மு.சி. ரகுநாதன் புதுமைப்பித்தன் ஜெயகாந்தன் வல்லிக்கண்ணன் போன்றவர்களுக்கு அணுக்கமான இலக்கிய நண்பராகத் திகழ்ந்தார்.

கடித இலக்கியம் கு.அழகிரிசாமிக்கும் கி.ராஜநாராயணனுக்கும் டி.கே.சிதம்பரநாத முதலியார் மீது மிகப்பெரிய ஈடுபாடு இருந்தது. அவருடைய கடிதமெழுதும் பாணியை அவர்கள் கடைப்பிடித்தனர். தமிழ் கடித இலக்கியத்தில் அவர்கள் எழுதிய கடிதங்களுக்கு முக்கியமான இடம் உண்டு. அழகிரிசாமி கி.ராஜநாராயணனுக்கு எழுதிய கடிதங்களும் சுந்தர ராமசாமிக்கு எழுதிய கடிதங்களும் (இதம் தந்த வரிகள்) தொகுக்கப்பட்டுள்ளன.

மரபிலக்கியம் கு. அழகிரிசாமிக்கு மரபிலக்கியம் மீது தீவிரமான ஈடுபாடு இருந்தது. சிற்றிலக்கியங்களிலும் தனிப்பாடல்களிலும் ரசனைக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அவை நூல்வடிவில் வெளிவந்தன. ரசனை மரபில் டி.கே.சிதம்பரநாத முதலியாரின் வழியை அழகிரிசாமி கடைப்பிடித்தார்.இலக்கியத்தேன், தமிழ் தந்த கவியின்பம், தமிழ் தந்த கவிச்செல்வம் ஆகியவை அவருடைய ரசனைக் கட்டுரைகள்.

மலேசிய இலக்கியப் பணி

1952 முதல் 1957 வரை கு.அழகிரிசாமி மலேசியாவில் தமிழ் நேசன் இதழில் பணியாற்றிய காலமே மலேசிய இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்காலம் என்று சொல்லப்படுகிறது. அதுவரை மிக ஆரம்பநிலையில், அரசியல் சார்ந்து படைப்புகள் அங்கே உருவாகிக் கொண்டிருந்தன. நவீனத்தமிழ்க் கவிதைகளை தமிழ்நேசனில் வெளியிட்டார். புதிய எழுத்தாளர்களை கண்டுபிடித்து ஊக்கப்படுத்தினார். மாதந்தோறும் மலேசியாவின் எழுத்தாளர்களும் ஆர்வலர்களும் சந்திக்கும் இலக்கியக்கூடுகைகளை நடத்தினார்.அவரை முன்னோடியாகக் கொண்டு கமலநாதன், துரைராஜ் போன்ற எழுத்தாளர்கள் மலேசியாவில் உருவாயினர்.

அழகிரிசாமி மலேசியாவை விட்டு வந்தபின் அவருடைய பங்களிப்பு அங்கே உணரப்பட்டது. 1983-ல் அவருடைய கு.அழகிரிசாமி கதைகள் என்னும் தொகுப்பு மலேசியாவில் வெளியிடப்பட்டது. மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு தலைமையில் நிகழ்ந்த விழாவில் அழகிரிசாமியின் மனைவி சீதாலட்சுமி அந்நூலை வெளியிட்டார். அவருடைய இரு நாடகங்களும் மலேசியாவில் பாடநூலாக வைக்கப்பட்டன. மலேசிய இலக்கிய வரலாற்றில் கு.அழகிரிசாமி முன்னோடிகளில் ஒருவராகத் தொடர்ந்து குறிப்பிடப்படுகிறார்.